பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய பத்து ஓயா பகுதியில் எரிந்த கெப் வண்டியில் நேற்று முன்தினம் (25) எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேலதிக தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் கம்பஹா தெகட்டன பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவருடையது என தெரியவந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, கெப் எரியக்கூடிய பொருட்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கெப் வண்டிக்கு அருகில் கிடந்த சூட்கேஸில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்கள் தெகட்டன பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலமாக காணப்பட்டதாக ஹபரணைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட பையில், உயிரிழந்த நபரின் பல ஆடைகள், தேசிய அடையாள அட்டையின் பிரதி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவும் காணப்பட்டதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருப்பதாகவும், அரசாங்க பரிசோதகர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நீதவான் ஆகியோர் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மின்னேரிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.