தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கறுப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில்,
எரிபொருள் விலையை அதிகரிக்காதே-விவசாயிகள், கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்கு,ஏழைகளை வஞ்சிக்காதே-அத்தியாவசிய பொருட்களுக்கு விலை அதிகரிக்காதே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைந்து முடிவு சொல்,ஜனநாயக போராட்டங்களை நசுக்காதே-கொரோனாவை காட்டி பொய் வழக்கு போடாதே,கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்தை மீளப்பெறு, கிசாலினியின் மரணத்திற்கு நீதியான விசாரணை வேண்டும்.
என்பவற்றுடன் விவசாயிகளின் உரம் மருந்து பிரச்சனைக்கு தீர்வு வழங்கு , சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்று-எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்காதே,சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்,பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு-அப்பாவி தமிழ் இளைஞர்களை கைது செய்யாதே,குடும்ப ஆட்சியில் நாட்டை வெளிநாடுகளுக்கு ஏலம் போடாதே,வடக்கில் திட்டமிட்ட நில அபகரிப்பை நிறுத்து பௌத்த மயமாக்கலை திணிக்காதே, ஜனநாயகத்திற்கு மதிப்பளி ஊடக அடக்கு முறையை நிறுத்து, அரை குறையாக உள்ள வீட்டுத்திட்டங்களை நிறைவு செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் இடம் பெற்றது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தினர் மத தலைவர்கள் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள்.
அதே நேரம் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அந்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதக அரசே படுகொலை அரசே தண்டிக்கப்படுவாய், நீதி ஒருநாள் தலைநிமிரும்,கொலைகார்கள் தண்டிக்கப்பட வேண்டும், சுயநிர்ணய உரிமை தமிழர்களிற்கும் உண்டு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.