கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கோனாவில் மகா வித்தியாலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதனை நிவர்த்தி செய்ய கோரி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டமானது இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. ஆசிரியர்களை நியமிக்கும் வரை ஆசிரியர் இடம்மாற்றம் வழங்காதே, பற்றாக்குறையான ஆசிரியர்களை நியமிக்கவும் உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்ட இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி தெற்கு கல்வி வலைய பணிமனையின் அதிகாரிகள், பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் வருகை தராத பட்சத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பொருத்தமான வளவாளர்களை நியமிப்பதாக எழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.