கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் மாணவர்களின் பாடசாலைக் கல்வி பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புக்களை நடாத்தி வருகின்றனர். இதனால் பாடசாலைக்கு வராது தனியார் வகுப்புக்களுக்கு மாணவர்கள் செல்கின்றனர்.
இது மாணவர்களுக்கான பாடசாலைக் கல்வியினை பாரியளவில் பாதிப்படையச் செய்து விடும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தனியார் கல்வி நிலையத்திற்கு பணம் செலுத்தி செல்லும் மாணவர்களின் இயல்பு, பாடசாலைக் கல்வியை மட்டும் நம்பி தங்கள் கல்வியைத் தொடரும் வறிய மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதித்து விடும் என இது தொடர்பில் சமூகவியல் ஆய்வாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
தனியார் கல்வி நிலையங்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்புக்களை முன்னெடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும்.பாடசாலைக் கல்வியோடு பாடசாலையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும்படி, தனியார் கல்வி நிலையங்கள் இயங்க வகை செய்ய வேண்டும்.
இது தொடர்பில் மாவட்ட மட்டத்திலான பொறுப்பு வாய்ந்த செயற்பாடுகளை விரைவாக உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு முகவரியிட்டு கடந்த 05ஆம் திகதி (05.07.2024) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கோவிட் காலப்பகுதியின் பின்னர் 2021,2022 பிரிவு மாணவர்கள் 4ம் தவணையுடன் பாடசாலைக்கு வருவது தனியார் கல்வி நிலையங்களால் நிறுத்தப்பட்டது.
இதனால் எமது மாவட்டத்தில் உயர்தரக் கல்வியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.(பாடசாலை புள்ளி விபரப்படி) இதே போல் ஏனையதர மாணவர்களும் தற்போது மறிக்கப்பட்டு பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களிற்கு செல்கின்றார்கள்.
இதனால் கற்றல் தொடர்பாகவும் சமூக சீர்கேடுகள் தொடர்பாகவும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.மேலும் மாலை நேரத்தில் இரவு 7 மணி தாண்டி வகுப்புகள் நடைபெறுவதால் பல மாணவ மாணவிகள் தவறாக நடக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே தயவு கூர்ந்து பாடசாலை நேரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்படும் தனியார் வகுப்புக்களை தடை செய்து மாணவர்களின் பாடசாலைக் கல்விக்கு வழி சமைக்குமாறும் இரவு வகுப்புக்களுக்கு உகந்த நடவடிக்கை எடுக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்.
இது தொடர்பில் கூடிய கவனமெடுக்கப்பட வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால கற்பித்தல் அனுபவம் கொண்ட ஒரு பாடசாலை ஆசிரியராக அந்த சமூக ஆர்வலர் இருப்பதோடு மாணவர்களின் கற்றல் மற்றும் அவர்களது எதிர்காலம் தொடர்பில் அவர் அதிக அக்கறையினை கொண்டிருப்பதையும் அவருடன் மேற்கொண்ட உரையாடலின் மூலம் அறிய முடிகின்றது.
கிளிநொச்சி நகரின் முன்னனி பாடசாலை ஒன்றின் ஆசிரியர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு ஆரோக்கியமான கல்விச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் பாடசாலையில் கற்பித்தலை சிறப்பாக முன்னெடுக்க முடியவில்லை என்றும் முறையிடும் போது கிளிநொச்சியில் உள்ள வலயக்கல்விப் பணிமனைகள் என்ன செய்து கொண்டிருக்கிறன என்ற கேள்வி எழுகின்றது.
தனியார் கல்வி நிலையங்களை கட்டுப்படுத்தி ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவந்து இயக்குவதற்கான எந்த நடைமுறைகளும் வடக்கில் மட்டுமல்ல முழு நாட்டிலுமே இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
பாடசாலைக் கல்வியினை முழுமையடையச் செய்து மாணவர்களின் கல்வி வெற்றியில் பங்கெடுப்பதாக கூறிக்கொள்ளும் தனியார் கல்வி நிலையங்கள் எவையும் தமக்கென பொதுவான நடைமுறை யாப்புக்கள் எவற்றையும் இதுவரை உருவாக்காது இருப்பது அவர்களின் நேர்த்தி மிக்க செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்ப இடமளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த சூழலில் வலயக்கல்விப் பணிமனைகள் பாடசாலைகளையும் தனியார் கல்வி நிலையங்களையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும்.
தனியார் கல்வி நிலையங்களை பிரதேச செயலகங்கள் பதிவு செய்வதோடு கல்விச் செயற்பாடுகளை வலயக்கல்விப் பணிமனைகள் கண்காணிப்பதாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிடுவதும் இங்கே நோக்கத்தக்கது.