தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ஜ) தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்எல் சாம்ஸ் சீசன் 3 இன் வெற்றியாளரான ஈழத்துக்குயில் கில்மிஷா வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (04.01.2024) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இறுதிச் சுற்று வரை முன்னேறிய கில்மிஷாவுக்கு வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதிகளிலும், தென்னிந்தியாவிலும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடத்திலும் ஆதரவு அதிகரித்திருந்தது.
அத்துடன், இறுதிச் சுற்றில் கில்மிஷா வெற்றிப் பெற வேண்டும் என்ற தமது அவாவை தமிழ் மக்கள் தங்களது சமூக ஊடங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
இதற்கு முன்னர் தென்னிந்திய தமிழ் ஊடகங்களில் நடத்தப்பட்ட பல போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை தமிழர்கள் பங்கு பற்றியிருந்த போதிலும், வெற்றிப்பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை.
எனினும், முதன்முறையாக தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடல் போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.
இதற்கு இலங்கையில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.