தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிக்ஷா வெற்றிவாகை சூடி இருந்தார்.
இந்நிலையில் நாடு திரும்பிய கில்மிக்ஷாவை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்ற யாழ்ப்பண வாசிகள் அதனை பெரும் விழா எடுத்தும் கொண்டாடி இருந்தனர்.
இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து மருத்துவ நிபுணர் Dr. முரளி வல்லிபுரநாதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,
கில்மிஷாவின் கொண்டாட்டங்களும் பேரினவாதிகளின் தந்திரங்களும் தனது பாட்டு திறமையால் தமிழ்நாட்டில் வெற்றியீட்டிய கில்மிஷாவின் திறமை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது.
ஆனால் அதற்கு ஜனாதிபதி பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளதும் அதன்பின் தேரில் ஏற்றி மிகையான கொண்டாட்டம் நடத்துவது தொடர்பாக தமிழ் பேசும் மக்கள் ஆராய வேண்டியதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். முதலில் ஜனாதிபதி ரணில் கடிதம் அனுப்பியதன் நோக்கத்தை ஆராய்வோம்.
வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழர் வாழும் பகுதிகளில் மாணவர்களின் கல்வியை அல்லது கல்விக்கு அப்பாற்பட்ட ஏனைய சங்கீதம் போன்ற கலைத்துறைகள் அல்லது மெய்வல்லுனர் போட்டிகள் அல்லது சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுகள் அல்லது கிரிக்கெட் போன்ற வெளி விளையாட்டுகளை ஊக்குவிக்க தென்பகுதி தலைமைகள் இதுவரை ஏதாவது உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்களா?
இப்போது கில்மிஷாவுக்கு கடிதம் எழுதும் ஜனாதிபதி ரணில், கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் நூலகம் எரிக்கப்பட்டது.
அப்போது அந்த நூலகத்தை மீளக் கட்டி எழுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது வாளாவிருந்த ரணில் இப்போது கில்மிஷாவுக்கு பகிரங்க கடிதம் அனுப்புவது அடுத்த தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக ஒரு தந்திரம் என்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பேரினவாதிகள் தொடர்ச்சியாக தமிழர்களின் முள்ளந்தண்டாக கருதப்பட்ட கல்வியை இலக்கு வைத்தே தமது திட்டமிட்ட தாக்குதலை நடத்தி வந்திருக்கிறார்கள்.
அதன் ஒருபகுதியை கடந்த காலங்களில் தமிழ் பகுதிகளில் இருந்த பல நூலகங்கள் மீதான தீவைப்புகளாக காண்கிறோம். அதே வேளையில் தமிழ் மாணவர்கள் கல்விக்கு அப்பாற்பட்ட ஏனைய துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்துவதை இனவாதிகள் தடுத்து வந்திருக்கிறார்கள்.
இதற்கு உதாரணங்களாக வடக்கு கிழக்கில் இருக்கும் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் ஒருவரும் ஏன் இதுவரை தேசிய மட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை மற்றும் சதுரங்க பயிற்றுவிப்பு நூல்கள் ஏன் தமிழ் மொழியில் வெளியிடவில்லை போன்ற விடயங்களை ஆராய்வதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் தமிழ் இளைஞர் சமூகத்தை சீரழிப்பதற்கு ஆயுதப்படையினர் போதை வஸ்துவை விநியோகிப்பதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்துள்ளனர். அண்மையில் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதியுடன் மிகவும் நெருக்கமானவர் போதைவஸ்து கடத்தலில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டது வெளியாகி இருந்தது .
ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிக்கும் அடிமையான பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் போல ஈழத்தமிழ் மக்கள் செயல்பட்டால் அது சூழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் ஈழத்தில் பேரழிவை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டில் 3 வயது பிள்ளைகளில் இருந்து பாடசாலை மாணவர்கள் பலரும் அவர்களது குடும்பங்களும் கல்வியில் கவனம் செலுத்தாது விரகதாபத்தை வெளிப்படுத்தும் குத்தாட்ட பாடல்களையும் பாடிக்கொண்டு விஜய் முதலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பாட்டு போட்டிகளும் தான் வாழ்க்கை என்று தமது எதிர்காலத்தை அழித்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கபொத சாதாரண தர பெறுபேறுகளுடன் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள கல்வி நிலை வீழ்ச்சி மாணவர்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் தொலைபேசிகளில் அதிக நேரத்தை செலவிடுவதை காட்டுகிறது. பேரினவாதம் தமிழர்களின் கல்வியை ஒடுக்குவதற்கு கடந்த காலங்களில் ஊடகங்களையும் விட்டுவைக்கவில்லை.
தேசிய தொலைக்காட்சி பல தசாப்தங்களாக சிங்களத்தில் மாணவர்களுக்கு உதவும் கல்வி நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வந்த அதே நேரம் தமிழில் சினிமா பாடல்களையும் குத்தாட்டங்களையும் ஒளிபரப்பி வந்தார்கள். மிக அண்மைக் காலத்திலேயே தமிழ் மாணவர்களுக்கு உதவும் கல்வி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அது சிங்கள கல்வி நிகழ்ச்சியுடன் ஒப்பிடும் போது இன்னமும் விருத்தி அடையாத நிலையிலேயே உள்ளது.
இவ்வாறான பேரினவாத சூழ்ச்சிகளின் மத்தியில் வாழும் தமிழ் மாணவர்களும் பெற்றோர்களும் கல்வி சமூகமும் இந்த சூழ்ச்சிகளை உணர்ந்து அதற்கு பலியாகாமல் கல்விக்கு முதலிடத்தையும் அதே வேளையில் கல்விக்கு ஊறு விளைவிக்காத வண்ணம் மாணவர்களின் ஏனைய திறமைகளை ஊக்குவிக்கும் மாற்று திட்டங்களுடன் நமது சமூகத்தை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.