கிறிஸ்தவ போதகர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ இலங்கை முழுவதும் போராட்டம் வெடிக்கும் என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஊடகம் ஒன்றின் தொகுப்பாளர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய பெண்ணும், பெண்ணின் தாயாரும், மதபோதகர் உட்பட மூவர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பச்சிளம் குழந்தையை பெண்ணின் வீட்டில் பிரசவித்து பொலித்தீன் பையினால் சுற்றி கொண்டு சென்று புளியம்பொக்கணை பெரியகுளம் பகுதியில் எரித்ததாகவும் பெண்ணுடன் தொடர்பு சந்தேகிக்கப்படும் மதபோதகர் ஒருவர் குழந்தையை எரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகவும் கைதுசெய்யப்பட்ட பெண் விசாரணையில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கிறிஸ்துவ போதகர் தொடர்பில் ஊடகம் ஒன்றின் தொகுப்பாளர் தெரிவித்திருப்பதாவது,
ஒரு கிறிஸ்துவ போதகர் என்பதற்காக நீங்கள் அவரை பழிவாங்குவதற்காக திட்டமிட்ட அரசியல் பின்னணி இதற்கு இருக்கின்றதா? அல்லது கிறிஸ்துவ போதகர் என்பதற்காக நாங்கள் அவரை அவமானம் படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட என்பதை சற்று ஆராய வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றச்சாட்டப்பட்ட போதகர் உண்மையிலேயே குற்றம் செய்தவராக இருப்பின், போதகர் உண்மையிலேயே அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்து இவருடைய கருவில் தான் அந்த குழந்தை பிறந்தது என்று உறுதி செய்யப்பட்டால் நிச்சயமாக அவரை எதிர்த்து போராடுவோம். அவருக்கு நாங்கள் தண்டனை வாங்கி தர சகல ஒத்துழைப்பையும் அரசாங்கத்திற்கும் நீதிமன்றத்திற்கு வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவருக்கும் அந்த பெண்ணுக்கு எந்த தொடர்பும் இல்லையென நீதித்துறை சரியான நீதியை வழங்கினால் நிச்சயமாக இவர் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டிற்காக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக இலங்கை முழுவதும் ஒட்டுமொத்த கிறிஸ்துவர்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து இதற்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார்.