சிங்கள மொழி தெரியாத அநேகருக்கு இன்றைய காலிமுகத் திடல் போராட்டம் குறித்து எந்த தெளிவும் இல்லை. பிறந்த குழந்தைக்கு சோறு தீத்த வேணும் போல பலரது பார்வைகள் உள்ளன.
எனவே அப்படியான பலர் பழைய பஞ்சாங்கத்தையே புரட்டி , குறிப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது எதிர்பார்த்த எழுச்சிதான். எழுச்சிக்கான தருணம் முறையாக வந்து மாட்டவில்லை. அதுவே தாமதம்.
அனைத்து இனங்களில் உள்ளோருக்கும் சந்தேகமாகத்தான் இருக்கிறது. இது மனித இயல்பு. அநேகர் அடிக்கும் அலையோடு அடித்துக் கொண்டு போய் பழக்கப்பட்டவர்கள். காரணம் நமது அடிமை மனோநிலைதான். தமிழ் – சிங்கள – இஸ்லாமிய இன – மதவாதிகளிடம் இருந்ததெல்லாம் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனும் எண்ணமல்ல.
ஆங்கிலேயன் பிரித்தாண்டான் என அவனை பழி சொல்லிக் கொண்டு , இவர்கள் பிரித்து ஆண்டதை இவனே உணரவில்லை. மண்டை அப்படித்தான் டிசைன் ஆகிவிட்டது. தற்போதைய போராட்டத்தின் பின் , யாரோ இருந்து இயக்குகிறார்கள் என நினைக்கிறார்கள். ஆரம்பத்தில் எவரும் இல்லை. ஆனால் இப்போது அநேகர் தொங்கி கொள்ள முனைகிறார்கள்.
அதைத்தான் அலையோடு அடித்துக் கொண்டு போகும் மனநிலை மனிதர்கள் என்கிறேன். உதாரணமாக தமிழருக்கு புரியுமாறு சொல்ல வேண்டும் என்றால் , ஈழ போராளிகள் தோன்றிய போது , தமிழர்களில் அதிகமானோர் அவர்களை ஆதரிக்கவே இல்லை. சிறு பிள்ளை வேளாண்மை வீடு வராது என கொச்சைபடுத்தினார்கள். காட்டிக் கொடுத்தார்கள்.
ஒரு சில அரசியல்வாதிகளின் தேவைக்காகவே அது தொடங்கப்பட்டது. ஆனால் காலப் போக்கில் மாற்றம் பெற்றது. அது இன்று நடப்பது போல சாத்வீக போராட்டம் அல்ல. வன்முறை கொண்டதாக ஆரம்பமானது. தமிழர்கள் கொலை பாதகங்களை ஆதரித்தவர்கள் அல்ல. ஆனால் அப்படியான கலாச்சாரத்தில் , ஒருவர் காட்டிக் கொடுப்பதாக சந்தேகம் வந்தாலே லைட் கம்பத்தில் கொன்று துரோகி என அடையாளப்படுத்தப்பட்ட கொலைகள் தெருக்களில் பார்க்க முடிந்தது.
அந்த தண்டனைகளே பலரது வாய்களை மூட வைத்தது. அன்று சோசல் மீடியாக்கள் இல்லை. இருந்திருந்தால் பலர் தங்கள் பக்கத்தை சொல்லியிருக்க வழி இருந்திருக்கும். தமிழ் மீடியாக்கள் , தமிழ் அரசியல்வாதிகள் சொல்வதை மட்டுமே பிரசுரித்தன. அது பிழையானாலும் யாராலும் மறுப்பறிக்கை விட முடியாது. பலமான தமிழ் அரசியல்வாதிகளின் அல்லக் கைகளே அன்றைய ஆயுததாரிகள், அடியாட்கள்.
இன்றும் அப்படியான ஆட்கள் மீடியாக்களில் இல்லாமல் இல்லை. அவர்களை விட சோசல் மீடியாக்கள் உண்மை பேசுகின்றன. பொய்யான ஒன்றாக இருந்தால் இன்னொரு பக்க மறுப்பு அல்லது நியாயப்படுத்தும் கருத்து எங்கோ வருகிறது. இன்றும் அடிமைகள், தவறாக தெரிந்தாலும் அவர்களது பக்கத்தில் நின்று விடுகிறார்கள். அடுத்தவர் கருத்தை ஏற்பதில்லை. இதில் படித்தோரும் அடக்கம். இதுவே உண்மை. இயக்கங்கள் ஆரம்பமான போது , அவர்களுக்கு யாரும் பெரிதாக உதவவில்லை.
இதே நிலைதான் சிங்கள கெரில்லா போரை நடத்திய JVPயின் அன்றைய நிலையும். களம் வெவ்வேறு அவ்வளவுதான். இவர்கள் பலமாகும் போது மக்கள் மெதுவாக அவர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள். அதுவரை எந்த நாடும் உதவவில்லை. எந்த மனிதரும் உதவவில்லை. அதனால்தான் கொள்ளையடித்தார்கள். போராட்டம் என்பது ஏதோ ஒரு பிரச்சனையால்தான் வெடித்து கிளம்புகிறது.
இன்றைய போராட்டத்தை ஆரம்பித்ததே ஒரு பெண்தான். அவரை இப்போது அநேகர் மறந்து விட்டார்கள். அவர் ஹிருணிகா. அவர்தான் கோட்டாவின் வீட்டின் முன் முதல் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். அதன்பின்னே அடுத்தவர்களுக்கு கோட்டாவை எதிர்க்க துணிவு ஏற்படுகிறது. இப்போது களத்தில் அநேகர் தாங்கள்தான் கோட்டாவை வீட்டுக்கு போகச் சொன்னோம் என்கிறார்கள்.
ஹிருணிகாவின் துணிவு , அந்த அலை பலருக்கு களத்தில் இறங்க உந்து சக்தியாக இருந்தது. அவருக்கு அவரது கட்சியினரே பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் அந்த விதை , இன்று வடிவம் மாறி மக்கள் போராட்டமாக விருட்சமாகியுள்ளது. ஹிருணிகா செய்தது வன்முறை போராட்டம் அல்ல. எங்கள் குறையை கோட்டாவிடம் சொல்ல வந்துள்ளோம் என சொல்லி பாதுகாப்பு படையினரிடம் , நாங்கள் போராடுவது உங்களுக்காகவும்தான், நீங்கள் எமது எதிரிகள் இல்லை என்றார்.
இதைத்தான் இன்றைய ஆர்ப்பாட்டக்காரர்களும் தொடர்கிறார்கள். ஆர்ப்பாட்டம் என்றால் , தடைகளை தள்ளி புரட்ட வேண்டும். போலீசார் தடியடி செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களும் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே சிஸ்டம். அது பல்கலைக் கழக மாணவர்களோடு நடந்த ஆர்ப்பாட்ட களத்தில் நடந்தது. ஆனால் ஏனைய இடங்களில் அப்படி ஒன்றும் இல்லை.
ஆனால் மிரிஹானவில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. அதை செய்தோர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்ல. அரச தரப்பினர். அதனால்தான் அவர்கள் இன்னும் பிடிடாமல் இருக்கிறார்கள். கலவரத்தை உருவாக்கி கட்டுப்படுத்துவது பழைய தியரி. அதை செய்ய முயன்ற அரசு அங்கே தோற்றது.
அமைதியான ஆர்ப்பாட்டக்காரரை எப்படி தாக்குவது? பூ கொடுத்து நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனும் போது எப்படி கண்ணீர் புகை வீசுவது? என் குடும்பத்தினர் படும் சோகம் ,உங்கள் வீட்டில் இல்லையா அண்ணா எனக் கேட்கும் போது , சீருடையின் கனதியை மீறி கண்ணீர் விடாமல் எப்படி இருப்பது? வன்முறை என்றால் சனம் பயப்படும். அமைதி என்றால் சனம் பயப்படாது. இது ஒரு சைகாலஜி ஆர்ப்பாட்டம்!
அதனால்தான் அரசு மயிரை பிடிங்கிக் கொள்கிறது. போலீசார் மக்களோடு கலந்து விட்டனர். அவர்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் பிரச்சனையே இல்லை. அச்சமின்றி கடமையை செய்கிறார்கள். அதற்கு காரணம் சிங்கள புத்திசீவிகளது வழி நடத்தல்தான். சிங்கள மொழி புரியாதோருக்கு அது புரியப் போவதில்லை. அதுதான் அநியாமான நிலை.
தமிழர் போராடிய பாசை இதுவல்ல. அதுவும் காரணம். உதவிகள் எங்கிருந்து வருகிறது? கொழும்பு , பல்லின கலாச்சாரம் கொண்ட நிலம். சில வேளைகளில் அரசியல்வாதிகள் இன – மதவாதங்களை உருவாக்கினாலும் , அது சில நாட்களில் அவை மறைந்து போய்விடும். அவர்கள் அப்படி ஆவதற்கு காரணமே மொழியறிவுதான். அதை படிக்க விடாது தடுத்த அரசியல்வாதிகளது மயான பூமியிலும் இடி விழ வேண்டும். அவர்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள். அவன் எந்த இனத்தவனாக இருந்தாலும் ….. அவர்களை நாம் சபித்தே ஆக வேண்டும்.
இந்த மொழி அறிவு கொண்ட கலாச்சாரம் , ஒருவருக்கு ஒருவர் உதவ வழி செய்கிறது. இன்று எப்படி? ஏன் சுனாமி வந்தபோது இவர்கள் உதவவில்லையா? புயல் – வெள்ளம் வந்த போது உதவவில்லையா? அப்படித்தான் இதுவும். அதை யாரும் சிந்திக்காமல் ஏதோ ஒரு நாடு உதவுகிறது என கற்பனை செய்கிறார்கள். அது இனி நடக்கும். வெளிநாடுகளில் இவர்களது ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போர் சில நாடுகளுக்கு உதவ அழுத்தங்களை கொடுப்பார்கள்.
அது நடக்க வேண்டும். அதுதான் பூகோள அரசியல். தலைமையில்லா போராட்டம் என நகையாடிய அதே தலைமைகள் , இப்போது தலை காட்ட வருகிறோம் என்கிறார்கள். அவர்கள் தலைமை ஏற்க தேவையில்லை. கைகொடுக்க வரலாம். வர வேண்டும். அவர்களது குரல்களுக்கு பலம் உண்டு. இந்த இளையோருக்கு ஏதாவது என்றால் , நாங்கள் அவர்களுக்காக உதவ நாங்கள் தயாராக இருப்போம் என அவர்கள் சொல்ல வேண்டும். உங்கள் எதிரியைத்தான் , இந்த இளையோரும் , மக்களும் எதிர்க்கிறார்கள்.
அதை செய்யாது மதில் மேல் பூனை போல இருந்தால் , உங்கள் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆர்ப்பாட்டக்காரர்களது போராட்ட வடிவத்தை சிதைக்க பல வடிவங்களில் அரசு முயல்கிறது என்பதை அறிய முடிகிறது. ஆனால் அத்தனையும் கசிந்து விடுகிறது. காரணம் அவர்களது வீட்டில் உள்ள யாரோ ஒருவர் போராட்ட களத்தில் இருக்கலாம்.
அவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இதனால் அரசு என்ன செய்ய முயன்றாலும் அது தோல்வியடையும். தப்பித் தவறிக் கூட அரசு , வன்முறையை பிரயோகித்தால் அது ராஜபக்ச குடும்பத்துக்கும், 225 பேருக்கும் மட்டுமல்ல , அவர்களது குடும்பங்களுக்கும் சொந்தமாக வைத்துக் கொள்ளும் சூனியமாகவே அமையும் என ஜீவன் பிரசாத் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

