இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் மிடுக்கான வகுப்பறைகள் (Smart Classroom) மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் தொழிநுட்பத்தில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்காகவும் நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய தரப்பண்பான கல்வி வாய்ப்புக்களை அடையாளங் கண்டு, பிள்ளைகளுக்கு நியாயமான அணுகுமுறைகளை வழங்க வேண்டிய காலத்தின் தேவையை அறிந்துகொண்டு, ´அதிக விளைவு வெளியீடுகளுடன் கூடிய சமூகமட்டக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்´ தொடர்பாக கையொப்பமிட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிகாட்டலுக்கமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்காக 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள் நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த நிதி வழங்கலுக்கான இந்தியக் குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.