யாழ்நகர் பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதி திகதி கடந்த சோடா போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்து, காலாவதி திகதியை அழித்து விநியோகஸ்தர் ஒருவரினால் இன்று (26) விநியோகிக்கப்பட்டுள்ளதாக, யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்க பெற்றது.
இந்த இரகசிய தகவலின்படி விரைந்து செயற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் யாழ்நகர் கடைகளில் எழுமாறாக பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன்போது காலாவதி திகதி கடந்த சோடாப்போத்தல்களில் காலாவதி திகதியில் மாற்றம் செய்தும் மற்றும் காலாவதி திகதியை அழித்தும் சோடாப்போத்தல்கள் கடைகளிற்கு விநியோகம் செய்யப்பட்டமை பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது.
இதனைதொடர்ந்து விநியோகஸ்தரின் பிறவுண் வீதியில் உள்ள களஞ்சியசாலை யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது காலாவதி திகதி அழிக்கப்பட்ட நிலையில் 1110 சோடாப்போத்தல்களும் 600 திகதி காலாவதியான சோடாப்போத்தல்களும் என மொத்தம் 1710 சோடாப்போத்தல்கள், கடைகளிற்கு விநியோகம் செய்வதற்கு தயார் நிலையில் இருந்த போது பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.
மேலும் குறித்த விநியோகஸ்தரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.