தான் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையிலும், கடத்தப்பட்ட தன் சகோதரியைக் காப்பாற்றுமாறு பிரித்தானிய பொலிசாருக்கு இரகசியமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் துபாய் இளவரசி.
தனது தந்தை தன்னை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதாக கூறும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய துபாய் இளவரசி Latifa (34), தற்போது இரகசியமாக பிரித்தானிய பொலிசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், 2000ஆவது ஆண்டு தன் தந்தையால் கடத்தப்பட்ட தன் சொந்த சகோதரியான Shamsa (38)இன் வழக்கை மீண்டும் துவக்குமாறு பிரித்தானிய பொலிசாரிடம் மன்றாடிக்கேட்டுக்கொண்டுள்ளார் Latifa.
தன் சகோதரி Shamsa, வழக்கோ, விசாரணையோ, குற்றச்சாட்டுகளோ இன்றி, யாரும் தொடர்பு கொள்ள முடியாத தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தினமும் அவருக்கு பிரம்படி கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம்தான், ஜோர்டான் ராணியான Noor, இளவரசி Shamsa எங்கே என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜோர்டான் ராணியான Noor, துபாய் மன்னரான ஷேக் முகமதை விட்டு சமீபத்தில் இங்கிலாந்துக்கு ஓடிப்போன மனைவியான இளவரசி Hayaவின் சித்தி ஆவார். அத்துடன், அவர் காணாமல் போனவர்கள் குறித்த சர்வதேச ஆணையத்தின் உறுப்பினரும் என்பது குறிப்பிடத்தக்கது.
2000ஆம் ஆண்டு, துபாய் அரசருக்கு சொந்தமான பிரித்தானியாவின் சர்ரேயிலுள்ள எஸ்டேட் ஒன்றிலிருந்து தப்பியோடினார் இளவரசி Shamsa. அப்போது அவருக்கு வயது 18.
அரசரின் உத்தரவின் பேரில் அவர் பிடிக்கப்பட்டு, மயக்கமருந்து செலுத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்து சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், இதுவரை Shamsa என்ன ஆனார் என்பது வெளி உலகுக்கு தெரியாமலே இருந்தது.
இந்நிலையில்தான், அவரது தங்கையான இளவரசி Latifa பிரித்தானிய பொலிசாருக்கு இரகசியமாக கடிதம் ஒன்றை எழுதி தன் அக்காவுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.