மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதியோர் இல்ல வீதியில் இன்று (11) மதியம் பாரியளவில் பரவிய தீ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரினால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இன்று திங்கட்கிழமை மதியம் வழமை போன்று வெற்று காணி ஒன்றில் குப்பைகளை எரித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட கடுமையான சுழல் காற்று காரணமாக குறித்த குப்பைகளில் பரவிய தீ அருகில் இருந்த ஏனைய வளவுகளுக்குள்ளும் பரவியது.
இதன் காரணமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட காணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் பல பயந்தரு பனை மரங்களும் தென்னை மரங்களும் எரிந்து நாசமாகி உள்ளன.
சம்பவத்தை அடுத்து மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவினர் ஸ்தலத்திற்கு உடனடியாக விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மாநகர சபையில் உடனடி நடவடிக்கை காரணமாக அருகில் இருந்த மர ஆலை மற்றும் பாதணி தொழிற்சாலை என்பன தீ விபத்தில் இருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது.