இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, கல்லூரி மாணவர்கள் தொலைபேசி மூலம் காதல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், பிளஸ்-2 மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி அருகே உள்ள எம்.தொட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திரன் என்பவரின் 17 வயதான மகள் பவித்ரா. இவர் சூளகிரியில் உள்ள தனியார் பாடசாலையொன்றில் பிளஸ்-2 கல்வி கற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பவித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பவித்ரா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவர் ஒருவர் பவித்ராவை காதலித்து வந்ததாகவும், அவருக்கு ஆதரவாக 17 வயதான மற்றொரு கல்லூரி மாணவர் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இருவரும் தொலைபேசி மூலம் பவித்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிப்பதாகவும் அவரது பெற்றோர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், பவித்ராவை காதலித்து வந்ததாகக் கூறப்படும் 18 வயது மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றைய 17 வயது மாணவரை தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள மாணவரையும் கைது செய்யக் கோரி பவித்ராவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூளகிரி காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுதீர் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சம்பவம் தொடர்பாக சூளகிரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் மற்றைய மாணவரை தேடி வருகின்றனர்.

