8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்துக் கொண்ட காதல் மனைவி தாழ்த்தப்பட்டவர் என்பதால், வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட கணவர் வீட்டில் தர்ணாவில் ஈடுபட்ட மனைவியை, கணவரின் குடும்பத்தார் அடித்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பொன்னரகம் பகுதியை சேர்ந்த மணிகண்டராஜா சென்னையில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு படிக்கும்பொழுதே பிரியா என்ற பெண்ணை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர் மணிகண்டராஜாவும், பிரியாவும் சென்னையில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா காரணமாக வேலையிழந்த மணிகண்டராஜா தனது மனைவியை அவரது ஊரான அவிநாசிக்கு அனுப்பி வைத்துவிட்டு, திண்டுக்கல்லிற்கு சென்றுள்ளார். அடிக்கடி அவிநாசிக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார். இதனிடையே மணிகண்டராஜாவுக்கு ஜனவரி 24ம் தேதி வேறொரு பெண்ணுடன் திருமணம் முடிந்த தகவலறிந்து திண்டுக்கல்லிற்கு ப்ரியா சென்றுள்ளார். அப்பொழுது பிரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மணிகண்டராஜாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் கூறியுள்ளனர்.
அதையடுத்து கணவரின் 2வது திருமணம் குறித்து அவிநாசி மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியா புகார் அளித்துள்ளார். அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், பொன்னகரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்ற பிரியா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மணிகண்டராஜாவும், அவரது பெற்றோரும் பிரியாவை தாக்கியதாகவும், மயங்கி விழுந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரியாவின் புகாரை அடுத்து மணிகண்டராஜா மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.