இனந்தெரியாத சிலர் தன்னை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக தொலைபேசி அழைப்பை எடுத்து தெரிவித்து, சூட்சுமான முறையில் தனது தந்தையிடம் இருந்து 15 லட்சம் ரூபாவை கப்பமாக பெற முயற்சித்த 24 வயதான யுவதியை அனுராபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தந்தையிடம் 15 லட்சம் ரூபாவை பெற்று அதனை தனது காதலனுக்கு வழங்க திட்டமிட்ட இந்த யுவதியுடன் அவரது காதலனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் தாதி கல்லூரியில் பயின்று வரும் நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியும் தாதி பாடநெறியை பூர்த்தி செய்த அனுராதபுரம் நகரை சேர்ந்த 26 வயதான இளைஞனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
எப்பாவல பிரதேசத்தில் தென்னம் காணி ஒன்றை கொள்வனவு செய்ய சந்தேக நபரின் தாய் அவருக்கு 15 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார். எனினும் இளைஞன் புதையலில் எடுத்த தங்கம் எனக் கூறி ஒருவர் விற்பனை செய்த தங்க முலாம் பூசப்பட்ட இரும்புகளை கொள்வனவு செய்து ஏமாந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசடியில் இழந்த இந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று யுவதியும், இளைஞனும் திட்டம் தீட்டியுள்ளனர். யுவதி வீட்டில் இருந்து சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.
இதனிடையே யுவதியின் காதலன், யுவதியின் தந்தையிடம் 15 லட்சம் ரூபாயை கப்பமாக கேட்டுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்றால், யுவதியை கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக அச்சமடைந்த யுவதியின் தந்தை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தலைமறைவாக இருந்த யுவதியையும் இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
இதன் பின்னர், நடத்திய விசாரணைகளில் 15 லட்சம் ரூபா பணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார், யுவதி மற்றும் இளைஞனின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். தமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் தொடர்பில் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கை அடுத்து, பொலிஸார் சாட்சியங்களை பதிவு செய்துக்கொண்டு இருவரையும் விடுதலை செய்துள்ளனர்.