மன்னாரில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தை தானியம் சாண்ட்’ நிறுவனம் பல்வேறு பகுதிகளில் 4000 துளைகளுக்கு மேல் இட்டு கனிய மணல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது மணல் அகழ்வுக்கான அனுமதியை கோரியுள்ளது.
இவ்வாறான நிலையில் நேற்று (08-11-2023) அனுமதி வழங்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இலங்கையில் உள்ள சுமார் 18 திணைக்களங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்ணையன் குடியிருப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் குறித்த விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி ஆய்வுகளுக்கு அனுமதி வழங்க மறுத்ததுடன் வீதி தடைகளையும் ஏற்படுத்தி மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது என்று கோஷம் எழுப்பியிருந்தனர்.
மக்களின் தொடர் எதிர்ப்பின் காரணமாக வருகை தந்த குழுவினர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியதுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் இவ் விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் வன்னியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் குறித்த மணல் அகழ்வு மேற்கொள்ள உள்ள இலங்கைக்கான பிரதிநிதியிடம் பாரிய அளவு லஞ்சம் கோரியதாகவும், இதேவேளை குறித்த அமைச்சரின் உறவினர் ஒருவர் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து குறித்த நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் மக்கள் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, காணி விற்பனை செய்ய மறுப்பவர்களை வெள்ளை வானில் கடத்துவோம், கொலை செய்வோம் என அச்சுறுத்தியும் காணிகளை அபகரித்ததாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் நேற்று குறித்த மணல் அகழ்வு பணிக்கான அனுமதி வழங்குவதற்கான ஆய்வு பணி நிறுத்தப்பட்டதாக நேற்றைய ஆய்வுப்பணிக்காக வருகை தந்த திணைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார்.
ஆனாலும் அகழ்வுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சரின் பின் புலத்தில் தற்போது மணல் அகழ்வுக்கான உயர்மட்ட அனுமதிகளை பெறுவதற்கான செயல்பாடுகள் இடம் பெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
குறித்த நபர் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்தும் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் மக்களை அச்சுறுத்தி காணி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பாக மன்னாரில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.