வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி வாழைச்சேனை பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் தியாவட்டவான் – மயிலங்கரைச்சை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய சீனித்தம்பி யோகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சடலமாக மீட்கப்பட்டவர், 15 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றதாகவும், அவரை தேடி வந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இதன்படி வயலில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.