2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்ஸில் காணாமல் போயுள்ளனர்.
தப்பிச் சென்றவர்களில் 4 பேர் இராணுவ அதிகாரிகள், இரண்டு விமானப்படை வீரர்கள் மற்றும் ஒரு கடற்படை அதிகாரி அடங்குவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் சென்ற 13 பேர் கொண்ட குழுவின் பிரதானியிடம் கடவுச்சீட்டுகள் இருந்த நிலையில் அவர் மதிய உணவு உண்பதற்காக சென்றிருந்த போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படை வீரர் ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள் திருடிச் சென்றதாக நம்பப்படுகிறது.
இந்த போட்டிகள் மே 5 முதல் 9 வரை பிரான்ஸின் Brive-la-Gaillarde இல் நடைபெற்றது.
இந்த போட்டியில் பங்குபெறுவதற்காக இலங்கை பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் அணி மே 04 அன்று நாட்டை விட்டு புறப்பட்டது.
இந்த குழுவில் இலங்கை பாதுகாப்பு சேவைகள் அணியில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 3 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் இவ்வாறு தப்பிச் சென்ற முப்படை அதிகாரிகள் பிரான்ஸில் வேலை தேடி சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், அதிகாரிகளின் கடவுச்சீட்டுகள் உயர் அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டிருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

