இரத்தினபுரி – ஹூனுவல பிரதேசத்தில் வசிக்கும் பதினொரு வயதுடைய நிமான்சா சத்சராணி தற்போது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை கவலையுடன் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தில் ஒரே பிள்ளை என்றும் ஐந்தாம் தரத்தில் படித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மொரத்தோட்டையில் உள்ள தனியார் மருந்தகமொன்றில் வைத்தியர் வழங்கிய மருந்தில் விஷம் கலந்ததால் தனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனவும் சிறுமியின் தந்தை கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில்,
கடந்த ஏப்ரல் 5ம் திகதி மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பின் கடந்த 6ம் திகதி காலை அங்குள்ள தனியார் மருந்தகத்தில் இருந்த மருத்துவரிடம் காண்பித்து மருந்து வழங்கப்பட்டது.
ஆனால் மறுநாள் ஏப்ரல் 7ஆம் திகதி காலையிலேயே மகளின் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தென்பட்டன. கண்கள் மூடியிருந்தன. உடல் சோர்வடைந்து காணப்பட்டது அதன்படி, மகள் அதே மருத்துவரிடம் திரும்பியபோது, மகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளதாக மருத்துவர் கூறினார்.
மருந்துக் கடையில் எடுக்க வேண்டிய மருந்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு, ஒரு வாரத்தில் குளிக்கச் சொன்னார். ஆனால் மறுநாள் ஏப்ரல் 8ஆம் திகதி மகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் தந்தை கூறியுள்ளார்.
அங்கு மகளுக்கு மருந்தில் விஷம் கலந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 8ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு மேல் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் மகளுக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. உடம்பில் இருந்த காயங்கள் ஓரளவு ஆறின.
ஆனால் பார்வை கிடைக்கவில்லை எனவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார். அதேவேளை மருந்தகத்தில் சிறுமிக்கு முதலில் மருந்து வழங்கிய மருத்துவர் , அரச மருத்துவமனையில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.