ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் குறித்து உலகளாவிய எச்சரிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உதவிகள் மீண்டும் தொடங்கி, 100க்கும் மேற்பட்ட லொறிகள் காசாவில் நுழையத் தயாராகி வருவதால், அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியாக, இஸ்ரேல் காசாவின் சில பகுதிகளில் தினமும் 10 மணி நேர இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
அல்-மவாசி, மத்திய டெய்ர் அல்-பலா மற்றும் காசா நகரில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை போர் நிறுத்தப்படும் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் விமர்சனங்கள் மற்றும் பரவலான பட்டினி பற்றிய ஆபத்தான படங்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2023 அக்டோபர் முதல் 87 சிறுவர்கள் உட்பட 133 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அங்கு இறந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (27) மீண்டும் உதவி விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸால் 25 தொன் உணவு மற்றும் பொருட்கள் பாராசூட் மூலம் கொண்டு வரப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமையிலான ஒரு புதிய குழாய் திட்டம், வரும் நாட்களில் கடற்கரையில் உள்ள 600,000 மக்களுக்கு எகிப்திலிருந்து உப்பு நீக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால் உதவிப் பெட்டிகள் விழுந்ததில் குறைந்தது 10 பேர் காயமடைந்த சம்பவங்கள் தொடர்ந்தன.
மேலும் உதவிக்காகக் காத்திருந்தபோது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், இஸ்ரேலிய இராணுவம் இந்தக் கூற்றுக்களை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், ஸ்கொலாந்தில் இருந்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தோஹாவில் ஹமாஸுடனான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் இப்போது அதன் அடுத்த நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
உதவிகளை விரைவாக வழங்க ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது.