தொழிற்சாலை ஒன்றில் கூரிய கத்திகளுடன் கைதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைதான யாழ்.இளைஞர்கள் ஐவரையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த போது அவர்கள் யாழ் ‘ஆவா’ குழுவுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பில் தெரியவருவது,
கடந்த வியாழக்கிழமை கம்பஹாவில் அத்தனகல்ல பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கத்திகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய யாழ்.இளைஞர்கள் ஐவரையும் குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வா, பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் என்சலம் டி சில்வா ஆகியோரின் கீழ் செயற்பட்ட விஷேட குழு அத்தனகல்ல தொழிற்சாலை ஒன்றில் வைத்து கைது செய்துள்ளது.
மேலும் இவர்களிடம் மேற்கொண்ட சோதனையின் போது தொழிற்சாலையின் மலசலகூடம் ஒன்றுக்கு பின் புறமாக, வாழை மரம் ஒன்றின் கீழ் சூட்சுமமாக புதைத்து வைக்கப்பட்டிருந்த இரு வாள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை இவர்கள் வைத்திருந்த தொலைபேசிகளை சோதனை செய்த பொலிஸார் அதில் பல்வேறு ஆவா குழுவுடன் தொடர்புடையோரின் புகைப்படங்களை வைத்திருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கனடாவில் உள்ள ஒருவருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பிலிருந்துள்ள நிலையில், அது தொடர்பில் விஷேடமாக அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றனர்.