கனடா – ஒட்டாவாவில் உள்ள வீட்டொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்க விக்கிரமசிங்க இன்றையதினம் (15) வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் 06-03-2024 திகதி இரவு நடந்த கொலைச் சம்பவத்தில் தர்ஷனி டிலந்திகா ஏகநாயக (35) மற்றும் இவரது 4 பிள்ளைகளான இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்ரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2), கெல்லி விக்ரமசிங்க (2 மாதம்) ஆகியோர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தர்ஷனியின் கணவரான தனுஷ்க விக்ரமசிங்க பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான 19 வயதான ஃபெப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையர் கைது செய்த நிலையில் நேற்றையதினம் தொலைபேசியின் வாயிலாக ஒட்டாவா நீதிமன்றில் ஆஜரானார்.
கொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகநபரின் மனநிலை தொடர்பில் விரிவான மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென அந்நாட்டின் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபரான ஃபேப்ரியோ டி சொய்சா தற்போது ஒட்டாவாவின் கார்லேட்டன் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தனது பெயரையும் பிறந்த திகதியையும் மெல்லிய குரலில் கூறியுள்ள நிலையில், அதிகாரிகள் அதை தெளிவாகவும் சத்தமாகவும் சொல்லும்படி கூறியுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், குற்றச்சாட்டில் மாற்றமில்லை என கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.