இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையப் பகுதியில் இன்று (10) அதிகாலை திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்திக கருணாரத்ன என்ற 54 வயதுடைய இந்தப் பயணி பெத்தேகன பிரதேசத்தில் வசித்து வந்தவர்.
அவரும் அவரது தாயாரும் இன்று அதிகாலை 02.18 மணியளவில் கத்தாரின் தோஹாவிலிருந்து கத்தார் எயார்வேஸ் விமானமான QRR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கனடாவிலிருந்து இலங்கைக்கு தனது தாயாரை அழைத்து வரும்போது, அதிகாலை 03.50 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் முகப்பு மண்டபத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது, திடீரென சுருண்டு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
மாரடைப்பு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.