பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட அலையினால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
சுமார் 20 படகுகள் சேதமடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை ஒன்றுடன் ஒன்று மோதியதால் பல படகுகள் சேதமடைந்தன.
இதேவேளை, எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்றும் பல பகுதிகளில் மழை பெய்துவருவதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக குக்குலேகங்கை பிரதேசத்தில் 90 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சீரற்ற வானிலையால் 127 குடும்பங்களைச் சேர்ந்த 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 176 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.