கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள் என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர், இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை என்றும் இலங்கையர் எவரும் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் இன்று ஒரே பலமான வலையமைப்பாகச் செயற்படுவதாகவும் கமல் குணரத்ன தெரிவித்தார்.
உயிர்த் தியாகம் செய்து போர் வீரர்கள் பெற்றுக்கொடுத்த சுதந்திரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கேள்விக்குறியாகியது.
கடந்த ஆட்சியின் போது விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப் படவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்புக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
நாடு இராணுவ மயமாக்கப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஓய்வுபெற்ற சில இராணுவ அதிகாரிகள் அரசாங்கப் பதவிகளை வகிப்பது ஒருபோதும் இராணுவமயமாக்கல் அல்ல.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பல வருடங்களாகப் பெற்றுக்கொண்ட தமது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைபுரிவது ஒரு தவறான விடயமா என்றும் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் இராணுவத்தினரின் பொறுப்பாகும். இதில் இராணுவத்தினர், கடற்படை மற்றும் விமானப்படையினர் முக்கிய பங்காற்றி வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
கடந்த இரண்டு வருடங்களில், நாட்டின் அபிவிருத்திக்காக இலங்கையின் முப்படையின் பங்களிப்பை தெளிவுபடுத்திய இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, நாட்டின் அபிவிருத்திக்காக இலங்கை இராணுவத்தினர் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர். சிகிச்சை நிலையங்கள், தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களைப் பராமரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
அத்துடன், தடுப்பூசி வேலைத்திட்டத்தில் இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் பாரிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு, பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றியதாகவும் குறிப்பிட்டார்.