முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான இன்று (15.05.2023)வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இன்றையதினம் (15.05.2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவர்களால் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பல இடங்களிலும் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தலினை முன்னிட்டு கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் வைத்து இன்று (15.05.2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், மண்மனை தென் எருவில்பற்று மக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தியுள்ளனர்.
முள்ளிவாய்காலில் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை விளக்கும் வகையிலாக எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் இதன்போது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
காரைநகர் – வலந்தலை முத்துமாரியம்மன் ஆலயம் முன்றலில் இன்றைய தினம் (15.05.2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகளின் நினைவாக ஆலய முன்றலில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலச்சந்திரன், உபதவிசாளர், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
யாழ்.இந்துக் கல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (15.05.2023) மதியம் 1:30 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இன்று மதியம் 2 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பீட தமிழ் மாணவர்களுடன் இணைந்து குறித்த செயற்றிட்டம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தலினை முன்னிட்டு நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் உள்ள நினைவேந்தல் துபாயில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களால் இந்த நினைவேந்தல் முன்னெக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுடரேற்றி, மலர்தூவி, அகவணக்கத்துடன், உயிர்நீத்த இன்னுயிர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு புங்குடுதீவு – குறிகட்டுவானில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவேந்தி முள்ளிவாய்க்கால் கஞ்சி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இன, மத, மொழிகளை கடந்து மக்கள் கஞ்சிகளை வாங்கிப் பருகுவதை அவதானிக்க முடிந்துள்ளது.
திருகோணமலை- வீரமாநகர் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு வீரமாநகர் நாகம்மாள் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ந.ஹரிகரகுமார் பிரதேச மக்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழின படுகொலை நினைவு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கல் நிகழ்வு பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பருத்தித்துறை தொகுதி அமைப்பாளர் மருத்துவர் சிவகுமார் மற்றும் தொகுதி உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.