கல்விக்கும் பட்டம் பெறுவதற்கும் வயது என்பது ஒரு தடையில்லை என சொல்வார்கள். குடும்ப சூழலால் படிக்கும் ஆர்வமும் திறமையும் இருந்தும் எத்தனையோ பேர் தங்கள் கல்வி கனவை தொலைத்துள்ளார்கள்.
அவர்களில் சிலர் தங்கள் வாழ்வினான பிற்காலப்பகுதியில் தமது கனவை நிலைநாட்டி சாதித்தவர்களும் உள்ளனர். அண்மையில் கூட கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் 80 ஐ தாண்டிய வயதில் பல்கலையில் படித்து பட்டம் பெற்றிருந்த நிகழ்வுகளும் உள்ளன.
அந்த வகையில் கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தாயும் மகளும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்து தற்போது ஒன்றாக வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளனர். கேரள மாநிலம், ஆலப்புழ காயங்குளத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் மாத்யூ தோமஸ். இவருடைய மனைவி பத்தனம்திட்டாவைச் சோந்த மரியம் மாத்யூ.
இவர், மாவேலிக்கர பிஷப் மூர் கல்லூரியில் படித்த பட்டதாரி ஆவார். இவர்களுடைய மகள் சாரா எலிசபெத்தின் படிப்புக்காக திருவனந்தபுரம் மண்ணந்தலயில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த நாளிலிருந்தே கணவரைப் போன்று வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை மரியம் மாத்யூவுக்கு இருந்தது. அதற்காக அவர் 22 வருடங்களாகக் காத்திருந்தார். பள்ளிப்படிப்பை முடித்த மகள் சாரா எலிசபெத் 2016இல் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் 5 வருட படிப்பான எல்.எல்.பி.யில் சோந்தார்.
அப்போது தாய்க்கு தானும் வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசை இன்னும் கூடியது இதையடுத்து மகளுக்கு இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு படிப்பு தொடங்கியதும் மரியம் மாத்யூ ஏற்கனவே டிகிரி முடித்திருந்ததால் 2018இல் மகளுடன் அதே கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.
கல்லூரியில் அந்த மூன்று ஆண்டுகளும் தாயும் மகளும் தோழியாகவேதான் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் 2021 நவம்பரில் படிப்பு முடிந்து தேர்வில் கல்லூரி அளவில் தாய் – மகள் இருவரும் முதல் மதிப்பெண் எடுத்து வெற்றிபெற்று அசத்தியுள்ளனர்.
இதையடுத்து, இருவரும் கடந்த 3ஆம் தேதி திருவனந்தபுரம் வஞ்சியூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தங்களைப் பதிவு செய்த நிலையில் தாய்க்கும் மகளுக்கும் பல்லரும் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.