நாட்டில் ஒரே ஒரு நினைவு தூபியை அமைத்து உயிரிழந்த இராணுவத்தினரையும், அதேபோல் விடுதலைப் புலிகளையும் நினைவு கூற முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மேலும் நாங்கள் தமிழ் மக்களை சிறுபான்மையினர் என அழைக்கப்போவதில்லை, அந்த வார்த்தைக்கே இடமில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி – வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமிழர்களாக இருப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அந்த மக்களை எப்படி உங்களுடைய அரசியலில் இணைத்துக்கொள்வீர்கள்? அதே போல் மனோகணேசன், அசாத் சாலி போன்றோர் உங்கள் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளார்கள். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? அவர்களை இணைத்து கொள்வீர்களா?
“வடக்கு மக்கள் கிழக்கு மக்கள் என்ற வேறுபாடு எம்மிடம் கிடையாது , அப்படியான வேறுபாடு தவறானது. அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கு அமைய அவர்கள் மாறுபடலாம். அவர்கள் சிறுபான்மையினர் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை அப்படி அழைக்கமாட்டோம்.
எங்களிடம் அந்த வார்த்தைக்கே இடமில்லை. சிறுமான்மையினர் என்று அந்த மக்களை அழைப்பவர்கள் பெரும்பான்மையினராக இருக்கவேண்டும். ஆகவே அங்குதான் முதலில் வேறுபாடு உருவாகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.