நாடு முழுவதிலும் ஒன்பது மாகாணங்களிலும் உள்ள தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாதம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இலங்கைக் கிளையின் இரண்டாம் நிலைத் தலைவர் நௌபர் மௌலவி இந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் இந்த ஆண்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சஹ்ரானுடன் ஏற்பட்டிருந்த தலைமைத்துவ பிரச்சினை காரணமாக திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு அந்த ஆண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து உறுப்பினர்களையும் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்திருப்பதனால் இந்த தாக்குதல் முயற்சி முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை உடைய நௌபர் மௌலவி நாடு முழுவதிலும் திட்டமிட்ட அடிப்படையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். எனினும் சஹ்ரான் ஹாசீம் உடனடியாக தாக்குதல்களை நடத்த விரும்பியதால் இருவருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை உருவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஹ்ரான் தரப்பினர் இரண்டாம் கட்ட தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். சுதந்திர தின நிகழ்வுகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவிருந்தது.
அதேவேளை நாட்டில் இரண்டாம் கட்ட தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் பாரியளவு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பங்கேற்ற உறுப்பினர்களை விடவும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்த தாக்குதல்களில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தனர்.
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் விரைந்து செயற்பட்டு தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்த காரணத்தினால் பாரிய அழிவுகளிலிருந்து நாடு தப்பிக்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

