இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் சேமிப்பு மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நடத்தப்பட்ட தடயவியல் தணிக்கையில் அடையாளம் காணப்பட்ட ஆரம்ப கட்ட தகவல்கள் நேற்று (15.02.2024) தமக்கு கிடைத்ததாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
13 இலட்சம் தகவல்கள் (தரவுகள்) பிரதான தரவுக் கட்டமைப்பிலிருந்து அல்லது SAP தளத்திலிருந்து அழிக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டிலிருந்து தரவு அழிப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் நெருக்கடி நிலவிய 2022 ஆம் ஆண்டிலேயே பெருமளவான தரவு அழிப்பு செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் தமது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான அறிக்கை, எதிர்வரும் வாரம் KPMG நிறுவனத்தால் வழங்கப்பட்ட பின்னர், அதனை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்க தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கையை மேலதிக நடவடிக்கைகளுக்காக அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.