எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்தால் அங்குள்ள எரிபொருள் தாங்கிகளை திறக்குமாறு பொதுமக்களால் விடுக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளால் மாத்திரமே அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எரிபொருள் தாங்கிகளைத் திறப்பது பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் செய்யப்பட வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அநாகரீகமாக நடந்துகொள்பவர்களை வீடியோ பதிவு செய்யுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவளை, சட்டவிரோதமாக சிலர் எரிபொருளை சேமித்து வைப்பதாக கிடைக்கப் பெற்ற பல்வேறு தகவல்களுக்கு அமைய நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில், சட்டவிரோதமாக எரிபொருள் சேமிப்பு மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இதுவரை 675 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சோதனை நடவடிக்கையில் 21,636 லீற்றர் பெட்ரோல், 33,462 லீற்றர் டீசல் மற்றும் 11,100 லீற்றர் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.