இலங்கையை அண்மித்த கடலில் 3 எரிபொருள் கப்பல்களுக்கு 33 இலட்சம் டொலர் தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும் , இது ஊழல் மோசடியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் 50 வீத எரிபொருளைக் கூட விநியோகிக்க முடியாது இருக்கும் நேரத்தில் இராஜாங்க அமைச்சரவையை நியமித்துள்ளனர். போராட்டத்தின் ஊடாக பிரதமராகி ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க திருடர்களை பிடிக்கப் போவதில்லை.
திருட்டை நிறுத்தப் போவதும் இல்லை. இலங்கைக்கு அருகில் எரிபொருள் கப்பல்கள் நாட்கணக்கில் நிற்கின்றன. அவற்றுக்கு தினமும் தாமதக் கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது 14 நாட்களாக ஒரு கப்பலுக்கும் , 7 நாட்களாக இன்னுமொரு கப்பலுக்கும் தினமொன்றுக்காக 33,000 டொலர்களை தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது .
மேலுமொரு கப்பல் வரவுள்ளது . இன்னும் இந்த தாமதக் கட்டணங்களும் செலுத்தப்படவில்லை. இப்போது வலுச்சக்திக்காக 3 அமைச்சர்கள் இருக்கின்றனர் .
இதுவும் புதியவொரு மோசடியே தாமதக் கட்டணம் மட்டுமன்றி விநியோக கட்டணமும் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.