முடக்கல் விரிவுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் இலங்கையில் மக்களுக்கு மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் கொவிட் -19 க்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளருமான வைத்தியர் அன்வர் ஹம்தானி அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நாடான சீனாவில், கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பினால் பல நகரங்களில் முடக்கலை விரிவுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இன்றும் கூட இலங்கையில் நாளொன்றுக்கு 400 புதிய கோவிட் தொற்றாளர்களும், குறைந்தது 10 இறப்புகளும் பதிவாகுகின்றன. இலங்கை உலகத்திலிருந்து அந்நியப்பட்ட தேசம் அல்ல.
எந்த நேரத்திலும், எதுவும் நடப்பது சாத்தியம். ஏனெனில் இது ஒரு புதிய பிறழ்வினால் ஏற்படக்கூடிய தொற்றாளர் அதிகரிப்பாக இருக்கிறது. தற்போது சீனாவால் விதிக்கப்படும் தடைகளின் ஊடாக இது தெளிவாகத் தெரிகிறது.
வைரஸின் அடிப்படையில் எதிர்காலத்தை எங்களால் கணிக்க முடியாவிட்டாலும், நாம் சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் தடுக்க, சுகாதார நடைமுறைகளுக்கு இணங்க நமது பங்கைச் செய்ய வேண்டும்.
நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.