அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அடுத்த பெற்றோல் கப்பல் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்றும், எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அமைச்சர் கோரியுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துபவர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம்! அமைச்சர் பகீர் தகவல்
எவ்வாறாயினும், நாட்டில் போதியளவு டீசல் கையிருப்பு இருப்பதனால் தற்போது அதற்கு அதிக தேவை ஏற்படாது என்றபோதிலும் டீசலை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு தேவையான எரிபொருளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.