இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அத்துடன், ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது பற்றி நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் பேசப்படவில்லை எனவும் அரசாங்கத்தின் இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில், நாடு முழுவதிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் வருகின்ற 14ஆம் திகதிவரை நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை நிராகரித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை தற்போது மேற்கொள்கின்றது. கோவிட் ஒழிப்பினை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், மக்களுக்கு பாதுகாப்பை அளிப்பதற்குமான முழுப்பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியதாகும்.
இந்த அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கோவிட் ஒழிப்பு செயலணி முடிவுகளை செய்கிறது.
நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற்று கோவிட் மரணம் மற்றும் பாதிப்பை முடிந்தளவு கட்டுப்படுத்த முடியுமென நம்பிக்கை வெளியிடுகின்றேன். மிகக் குறுகிய தரப்பினரே ஊரடங்கு சட்டத்தின் நிலைமையிலும் வெளியே பொறுப்பற்று நடமாடுகின்றனர்.
மக்களின் ஒத்துழைப்பின்றி கோவிட் ஒழிப்பை நிறைவுசெய்ய முடியாது. மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் அவரவர் தங்களது உயிரைப் பாதுகாப்பு செய்ய வேண்டிய நிலைமையே ஏற்படும்.
எவ்வாறாயினும் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பது மற்றும் நீக்குவது பற்றி அமைச்சரவையில் நேற்று கலந்துரையாடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
-தமிழ்வின்-