படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (29) வடக்கு கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
வவுனியா,
தராக்கி சிவராமின் 17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி இன்று (29) வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நினைவுத்தினமானது வவுனியா நகரசபை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் இடம்பெற்றது.
முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழறிஞர் தமிழருவி த. சிவகுமாரன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் இரவீந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் இந் நினைவு தினத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தராக்கி சிவராமின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் தீபமேற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தராக்கி சிவராம் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்ததுடன், சங்கத்தின் முக்கியஸ்தர் கி. வசந்தரூபனால் நன்றியுரையும் நிகழ்த்தப்பட்டது.