உலகின் விசாலமான கொள்கலன் கப்பலான “ எவர் ஏஸ்” கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றிரவு தனது பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவர் க்றீன் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த கப்பல் அதிக எண்ணிக்கையான கொள்கலன்களை ஒரே தடவையில் ஏற்றிச் செல்லக்கூடியது. 400 மீற்றர் நீளமும் 61.5 மீற்றர் அகலம் கொண்ட இந்த கப்பல் 23,992 கொள்கலன்களை ஏற்றும் திறன் கொண்டுள்ளதுடன் 22.6 கடல் மைல் வேகத்தில் நகரக்கூடியதாகும்.
கடந்த ஜூலை மாதம் ‘கெண்டெய்னர் கேரியர் எவர்கிரீன் ‘நிறுவனத்துடன் இணைந்த இந்த கப்பலானது தற்போது பனாமாவின் கொடியின் கீழ் பயணிக்கிறது. ஜூலை மாதம் 28 ஆம் திகதி ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுப்படும் இந்தக் கப்பல், சீனாவின் கிங்டாவோ, ஷங்காய், நிங்போ, தாய்பே, யன்டியன், ரொட்டர்டேம், ஹேம்பர்க் மற்றும் பெலிக்ஸ்டோவ் போன்ற துறைமுகங்களுக்கு பயணித்துள்ளது.
தொடர்ந்து கடந்த மாதம் நெதர்லாந்தின் ரோட்டர்டேமில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தனது நடவடிக்கைகளை நிறைவு செய்த பின்னர் எவர் ஏஸ் கப்பல் மலேசியா மற்றும் சிங்கப்பூரை நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கப்பலின் கப்டன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்நிலையில் 24 ஊழியர்களைக் கொண்ட இந்தக் கப்பல், இன்று நள்ளிரவு வரை கொழும் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என துறைமுக அதிகார சபை தெரிவித்தது.
இதேவேளை உலகில் இவ்வகையான பெரிய கப்பல்களை கையாளும் திறன் கொண்ட 24 துறைமுகங்கள் மாத்திரமே உள்ளன. அதில் தெற்காசியாவின் கேந்திர துறைமுகமான கொழும்பு துறைமுகமும் ஒன்றென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.