ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் தொடர்பில் பிரமிக்கவைக்கும் தகவல்கள் வெளியாகி பல்லரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும். இந்தக் கார் ஹம்மர் H1X3 என்று அழைக்கப்படுகிறது. இந்த ராட்சத கார் வழக்கமான H1 மொடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு பெரியது.
M998 Humvee இராணுவ டிரக்கின் பொதுமக்கள் பயன்பாட்டு தயாரிப்புக்களே ஹம்மர் H1 ஆகும். ஆனால் இந்த அரேபிய ஷேக் தயாரித்துள்ளது H1X3. காரின் உள்ளே படுக்கையறை, கழிப்பறை, சமையலறை உள்ளன.
அத்துடன் ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனித்தனி இன்ஜின் என இந்தக் காரில் நான்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷேக் ஹமத் தீவிர கார் பிரியராம். கோடிக் கணக்கில் பணம் செலவழித்து விதவிதமான கார்களை வாங்கி அவர் சேகரித்து வருகிறாராம்.
அதேவேளை அபுதாபில், கார்களுக்கென்று தனியே அருங்காட்சியகம் வைத்துள்ளார். மேலும் அவர் கார் சேகரிப்புகளுக்காக கின்னஸ் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளாராம்.
இந்த நிலையில் தற்போது அவரது அருங்காட்சியகத்தில்தான் இந்த ஹம்மர் கார் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இந்தக் கார் காட்சிப்படுத்த மட்டுமல்ல, ஓட்டவும்தான் என்பது கூடுதல் தகவல்.