மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 5 உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளியன்று (21) வயல்வேலை முடித்து கிரான் பகுதியிலிருந்து சித்தாண்டியிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பிரதான வீதியில் கிரானுக்கும் சித்தாண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்து இடம்பெற்றது .
சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்திரசேன ரேனுஜன் (வயது 29) படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
விபத்தின்போது படுகாயடைந்த அவர், மூளைச் சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்ததை அடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது உடலுறுப்புக்களைத் தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.
தானம் அளிக்கப்பட்ட சிறு நீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம்
அதனடிப்படையில் மூளைச் சாவடைந்த ரேனுஜனின் சிறு நீரகங்கள், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய அவயவங்கள் தானம் செய்யப்பட்டதாக ரேனுஜனின் சகோதரி தெரிவித்தார்.
தமது சகோதரனை இழந்தது ஆறாத் துயரமாக இருந்த போதிலும் தமது சகோதரனின் உடல் உறுப்புக்கள் 5 பேருக்கு வாழ்வளிக்கும் என உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்தார்.
உயிரிழந்த ரேனுஜனின் உடல் அதிகளவானோரின் பங்கேற்புடன் சனிக்கிழமை 22ஆம் திகதி சித்தாண்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய மற்றைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.