உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் எவருக்கேனும் தகவல் தெரிந்தால் அதுபற்றி அறிவிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக நௌபர் மெளலவியையே கருதுவதாகவும், இவருக்கு மேலதிகமாக பிரதான சூத்திரதாரி தொடர்பில் எவருக்கேனும் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கமும், பொலிஸாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விசாரணை நடவடிக்கைகளில் அரசாங்கம் மந்தக் கதியில் செயற்படுகின்றது என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் அநியாயமானது.
இதனால் அந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கின்றோம். அத்துடன் இந்தத் தாக்குதல் தொடர்பாக குரலெழுப்பும் நபர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுவும் உண்மைக்கு புறம்பானது என்று கூறினார்.