எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை பலிகடா ஆக்குவதை நிறுத்து என்ற தலைப்பின் கீழ் விடுத்துள்ள அறிவிப்பிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் “இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மாணவர்களின் உரிமைகள் மற்றும் நடைமுறை நிலைமைகளைப் புறக்கணித்து பரீட்சை திணைக்களம் செயற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அதிகாரிகள் தமது நிர்வாக அட்டவணைகளை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்ற கலவையான இலக்குடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாத பின்னணியில் இவ்வருட உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகும், இரண்டாம் முறையாக பரீட்சைக்கு தயாராகும் பிள்ளைகளுக்கு நவம்பர் மாதம் பரீட்சைக்கான திகதி நிர்ணயம் செய்யப்படுவதால் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலப்பகுதியே உள்ளது.
பாடங்களை மாற்றி மீண்டும் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு இது போதாத காலம். இந்நிலையில் சில மாணவர்களின் பல்கலைக்கழக கனவு மங்கலாகிவிடும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டுகிறார்.