உக்ரைன்-ரஷியா இடையிலான விவகாரத்தில் உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதோடு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய படைகளுக்கு தேவையான உதவிகளையும் செய்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் போரில் பெலாரஸ் நேரடியாக பங்கேற்கும் எனவும், ரஷிய படைகளுடன் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எனவும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
“உக்ரைன் நெருக்கடியின் தற்போதைய சூழலில் பெலாரஸ் நாடும் ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
வரும் நாட்களில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தது போர் குறித்த முடிவை பெலராஸ் அதிபர் எடுப்பார் என தெரிகிறது” என்றனர்.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, பெலராஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ரஷியாவில் உள்ள அமெரிக்கா தூதரங்களில் பணியாற்றும் அத்தியாவசியமற்ற துறை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறலாம் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவை அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் பிறப்பித்தார்.