உக்ரைனில் நடத்தும் ராணுவ உயிரியல் ஆய்வக செயல்பாடுகள் பற்றிய தகவலை அமெரிக்கா உடனடியாக வெளியிட ரஷ்ய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
உக்ரைன் மீதான போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன.
எனினும், போரை கைவிட ரஷ்யா மறுத்து உள்ளது. உக்ரைனும், தனியாளாக போரை எதிர்கொண்டு வருகிறது.
நேட்டோவில் உறுப்பினர் அல்லாத நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் போரில் களமிறங்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரஷ்ய தூதரகம் தனது டெலிகிராம் சேனல் வழியாக வெளியிட்டு உள்ள செய்தியில், உக்ரைன் நாட்டில் உள்ள ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ உயிரியல் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை உடனடியாக அமெரிக்கா வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இந்த செயல்களுக்கு பின்னால், பென்டகன் அமெரிக்க ராணுவ தலைமையகம் அமைப்பு இருக்கும்போது, எந்த வகையான அமைதியான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.