ரஸ்யாவில் இஸ்ரேலிய விமானம் ஒன்று தரையிறங்குவதற்கு முன்னர் விமானநிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் டகெஸ்தான் விமானநிலையத்தில் இஸ்ரேலின் தலைநகரிலிருந்து விமானமொன்று வருவதற்கு சற்று முன்னர் இடம்பெற்றது.
விமானநிலையத்தில் பாலஸ்தீன கொடிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் விமானநிலைய ஓடுபாதை வரை சென்றதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
ஏனையவர்கள் விமானநிலையத்திற்கு வெளியே கார்களை நிறுத்தி எவராவது இஸ்ரேலிய ஆவணங்களை வைத்திருக்கின்றார்களா என சோதனையிட்டுள்ளனர்.
இந்நிலையில் காசா மோதல் காரணமாக சீற்றமடைந்த குழுவினர் இஸ்ரேலிய பயணிகளை தாக்க திட்டமிட்டிருக்கலாம் என பிபிசி தெரிவித்துள்ளது. டகெஸ்தானில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள் ஆவார்கள்.
இந்த சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் இஸ்ரேலியர்கள் யூதர்கள் எங்கிருந்தாலும் அவர்களை ரஸ்யா பாதுகாக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராகவும் அவர்கள் யூதர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராகவும் நடந்துகொண்ட விதத்திற்காகவும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின் போது பலர் காயமடைந்ததாகவும் , அவர்களுக்கு மருத்துவசிகிச்சை அளிக்கவேண்டிய நிலையேற்பட்டதாகவும் டகெஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.