ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வரவுள்ளார்.
கன்னி விக்னராஜா , ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் உதவி நிர்வாகி மற்றும் அதன் ஆசிய – பசிபிக் பிராந்திய பணிப்பாளராகவும் உள்ளார்.
அண்மையில் முடிவடைந்த COPE 26 உலக காலநிலை மாநாட்டின் முடிவுகள் மற்றும் பிராந்தியத்தினுள் கொவிட் தொற்றுக்கு பிந்திய பொருளாதார மீட்சி என்பவற்றை ஆராய்வதே உதவி செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என கூறப்படுகின்றது.
இந்த விஜயத்தின்போது அவர், விசேடமாக மனிதவள அபிவிருத்தித் துறையின் வெற்றிக்காக, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கன்னி விக்னராஜா இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார். இலங்கையில் பிறந்த கன்னி விக்னராஜா பிறின்ஸ்ரென் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றதுடன் அமெரிக்காவின் Bryn Mawr கல்லூரியில் பொருளாதாரத் துறையில் இளமாணி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது