நாட்டில் பணப்பரிவர்த்தனையில் கணிசமான அதிகரிப்பு, சுற்றுலாப்பயணிகளின் வருகையின் வருமானம் மற்றும் இறக்குமதி குறைவினால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சீராக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அத்தியாவசியமற்ற பல பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதால் டொலருக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தமது வருமானத்தை உத்தியோகபூர்வ வழிகளில் அனுப்புவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ள அதேவேளை, எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீடுகளுடன், நடுத்தர காலத்தில் ரூபாவின் மதிப்பு மேலும் உயரக்கூடும் என்றார்.
இதன்போது ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்,ரூபாவின் பெறுமதியை மெதுவாக்குவதற்கு இலங்கை மத்திய வங்கி தலையிட்டதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இந்த வருடம் மத்திய வங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உள்நாட்டு சந்தையில் இருந்து கொள்வனவு செய்துள்ளது.
குறுகிய கால நன்மைகள் மாத்திரமன்றி, நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் நீண்டகால தாக்கத்தையும் கருத்திற் கொண்டு அரசாங்கமும் மத்திய வங்கியும் பொருளாதாரத்தை முறையான முறையில் நிர்வகித்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக தற்போதைய அரசாங்கம் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறது என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.