தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் அரிசியை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரிசியின் விலை குறைவதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற “நிலையான நாட்டிற்கு ஒரு வழி” செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற காலத்தின் அரிசி விலைக்கும் தற்போதைய அரிசியின் விலைக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது ஒரு கிலோ வெள்ளை அரிசியை 125 முதல் 130 ரூபா வரை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி நெல் கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் திறைசேரியில் இருந்து வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக ‘சிறுபோக பருவத்தில் நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் வன விலங்குகளால் விவசாயத்திற்கு அதிகளவில் சேதம் ஏற்படுகின்றது. கடந்த வருடம் மாத்திரம் 03 மில்லியன் தேங்காய்கள் குரங்குகளினால் சேதமடைந்துள்ளன.
ஆனால் இதுபற்றிப் பேசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவசாய அமைச்சிடம் இது வரை குரங்குகளின் பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வு எதனையும் முன்வைக்கவில்லை.
ஆனால் உலக நாடுகளில் விலங்குகள் பெருகியபோது அவற்றைக் கொன்று விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாது.
எனவே, அனைவரும் சேர்ந்து கலந்துரையாடி இதற்கு விரைவான தீர்வை வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.