இலங்கையின் உறுதியான மற்றும் நம்பிக்கையான பங்காளியாக இருப்போம் என இந்தியா அறிவித்துள்ளது.
அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் கலந்துரையாடியதாகவும் எஸ். ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை முன்கூட்டியே செயல்படுத்துவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா மற்ற சர்வதேச நாடுகளுடன் முன்முயற்சிகளுடன் இணைந்து செயல்படும் என்று அவர் உறுதியளித்தார்.
எரி சக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் திருகோணமலை எண்ணெய் குதங்களின் மேம்படுத்தலையும் அவர் வரவேற்றார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் விடுத்துள்ளார்.