இலங்கையின் தேயிலை உற்பத்தியாளர்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தவும், வணிக வாய்ப்புகளை ஆராயவும், இங்கிலாந்து தேயிலைத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஒன்று, இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட வர்த்தக கூட்டாண்மை திட்டத்தின் கீழ் இந்த வருகை அமைகிறது.
இலங்கை வரும் இங்கிலாந்து நிபுணர்கள் 12 பேர், மலையகப் பகுதிகளில் உள்ள சிறப்பு தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுடன் காலநிலை பாதிப்பு மற்றும் உற்பத்தியின் தரம் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
இந்த வர்த்தக பயணத்தின் போது, ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்பவர்கள், உயர்தர இலங்கை தேயிலை உற்பத்தியாளர்களுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச சந்தைகளுக்கு பாலம் அமைத்து, தேயிலைத்துறையில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான நீண்ட கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான திட்டத்தின் பகுதியாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.