கிழக்கு ஆசிய நாடுகளில் கட்டாய உழைப்பால் இயக்கப்படும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல் தொழிநுட்ப துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் வசிப்பவர்கள் மாத்திரமல்லாமல் டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களை அறிவுறுத்தியுள்ளது.

